Ads (728x90)

பல தசாப்தங்களாக நிலவி வந்த தண்டனை விலக்கீட்டை இரத்துச் செய்துக்கொள்ளவும், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்கவும் வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கின் அண்மைய இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் இலங்கைக்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றையும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

சுயாதீனமான அரச வழக்குதொடுநர் அலுவலகத்தை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கும் அதே வேளையில், சிவில் சமூகத்தின் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல், தன்னிச்சையான கைதுகள், சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணங்கள் குறித்து ட்ர்க்கின் அறிக்கை எச்சரிக்கிறது.

அத்துடன் இணையவழி பாதுகாப்புச் சட்டம், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட நிறுவன மற்றும் தரவு பாதுகாப்பு சட்டமூலம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களை இரத்து செய்ய அல்லது திருத்தவும் இது வலியுறுத்துகிறது.

அதேநேரம் காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் கண்காணிப்பது மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது

சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் மரணங்கள் தொடர்பான வழக்குகளையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதுடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் மீது பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை எடுத்துக்காட்டியுள்ள வோல்கர் டர்க், தீங்கு விளைவிக்கும் சிக்கன நடவடிக்கைகள் இல்லாமல் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கத்துக்கு நிதி இடத்தை வழங்குமாறு சர்வதேச கடன் வழங்குநர்களை உயர்ஸ்தானிகர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் தேசிய ஒற்றுமை மற்றும் கடந்த கால துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமை என்பன, உண்மையான பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றில் சார்ந்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget