மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலோ அல்லது கைரேகை வருகை முறையிலோ மேலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் மாத மேலதிக நேரக் கொடுப்பனவு ஜனவரி 2027 முதல் பொருந்தக்கூடிய அடிப்படை வேதனத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், ஏப்ரல் 2025 அல்லது ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள உயர்வுகளின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் உள்ள ஒரு சிறிய குழு ஊழியர்கள் மட்டுமே இணங்க மறுத்துள்ளதாகவும் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திறைசேரி நிதியைப் பயன்படுத்தி வேதனத்தையும், மேலதிக நேரக் கொடுப்பனவையும் அதிகரித்துள்ளோம். இந்த அதிகரிப்புகள் இருந்த போதிலும், ஒரு ஊழியர் கைரேகை முறையைப் பயன்படுத்த மறுத்தால், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதனால் மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் மேலும் அதிகரிப்பு இல்லை மற்றும் கைரேகை முறையை நீக்குவதில்லை என்ற தீர்மானத்துக்கு இணங்கும் அஞ்சல் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும், ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
_large1_large.jpg)
Post a Comment