அதேநேரம் ரணிலை சிறையில் அடைத்தது போல் அவரின் பொருளாதார வேலைத்திட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட இந்த அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏனெனில் ரணில் விக்ரமசிங்கவினர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்து செயற்பட்ட விதத்தை இந்த நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். பட்டலந்த போன்ற வதைமுகாம்களை ஏற்படுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு வதைகளை கொடுத்து கொலை செய்தது ரணில் விக்ரமசிங்கவினராகும்.
மத்திய வங்கியில் கொள்ளையடித்து நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது ரணில் விக்ரமசிங்கவினராகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுவெடிப்பு இடம்பெறும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.
அந்த ரணில் விக்ரமசிங்கவே இன்று சிறையில் இருக்கிறார். அதனால் ரணில் விக்ரமசிங்க கட்டாயமாக சிறைக்கு செல்ல வேண்டியவர் என்றே நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜபக்ஷவினர், சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்தே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நாட்டு மக்கள் இந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை 2022 மக்கள் போராட்டத்தின் போதும் அதன் பின்னர் வந்த தேர்தல்களின்போதும் நிராகரித்திருந்தனர். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட மக்கள் விரோதியான ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவினர், சந்திரிக்கா, மைத்திரிபாலவினர் என அனைவரும் ஒரு மேடைக்கு வந்து ரணிலுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். சஜித் பிரேமதாசவும் ரணிலை பாதுகாக்க செயற்பட்டு வருகிறார். இவர்கள் அனைவரும் இந்த நாட்டின் வளங்களை அழிப்பதற்கும் பொதுமக்கள் சொத்துக்களை திருடுவதற்கும் ஆதரவளித்த குற்றவாளிகள். அதனால் இவர்கள் அனைவரையும் ஒரே கூடையில் போட்டு புதைத்துவிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment