ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. அவர் ”சூம்” தொழில்நுட்பத்தினூடாக வழக்கில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் குழு தற்போது பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைபட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்கவை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment