2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற 'ஸ்னாப்பேக்' (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும். இத்துடன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலுள்ள உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக வைக்கப்பட்டது.
ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

Post a Comment