Ads (728x90)

இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு வசிக்கும் இலங்கையர்களை நேற்று டோக்கியோவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், ஊழல் மற்றும் மோசடி இல்லாத அரசாங்கத்தை நிறுவுதல் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்காக அரசாங்கம் கணிசமான அளவு பணிகளை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இந்தப் பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களிடமிருந்து ஒரு கிண்ணம் நீர் கூட எங்களுக்கு வேண்டாம். நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வாருங்கள். மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் போது நீங்கள் பெற்ற அனுபவங்களை எங்கள் நாட்டிற்கு கொண்டு வாருங்கள். அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் தயார் செய்து தருகிறோம். அதன்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக மாற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் ஜப்பானில் வாழும் மகாசங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget