Ads (728x90)

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது தெற்கு கடல் பகுதியில் இருந்து 51 பொதிகளில் சுமார் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதில் 670 கிலோ 676 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ ஹேஷ் ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் மூன்று படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது. 

இதனையடுத்து பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்நிலையில் தேடுதலுக்கு பயந்து கடலில் வீசப்பட்ட நிலையில் இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget