Ads (728x90)

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பசில் ராஜபக்ஷ பணம் வழங்கியதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அத்துடன் வெள்ளைக் கொடியுடன் வந்த பொது மக்களைச் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டதற்கான காணொளியை விரைவில் தாம் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

யுத்த காலத்தின் போது தான், பசில் ராஜபக்ஷவுடன் ஒரு மணித்தியாலமாக உரையாடிக்கொண்டிருந்தபோது, 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்த செய்தியை பசில் ராஜபக்ஷ தம்மிடம் கூறியதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

தாம் குறித்த வேலையை செய்தமையினாலேயே 2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாக்களிப்பதை, நிறுத்துவதாக விடுதலைப்புலிகள் வாக்குறுதி அளித்ததாகவும் பசில் ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார். 

அயல் நாடுகளிலிருந்து தேர்தலுக்காகக் கிடைத்த இரண்டு மில்லியன் டொலர்கள் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்று வழங்கியதாக பசில் ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அவ்வாறு வழங்கப்படும் போது, மலையக அரசியல் தலைவர்களும் இருந்ததாக பசில் ராஜபக்ஷ கூறியதாக சரத் பொன்சேகா தெரிவித்தார். 

இதேவேளை 2009 பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜனவரி 28 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு உத்தரவிட்டார். 

அந்த சந்தர்ப்பத்திலேயே, விடுதலைப் புலிகள் ஜனவரி 31 ஆம் திகதி இரவு நந்திக்கடல் வழியாக வந்து பாரிய தாக்குதலை நடத்தியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

இதனால் மார்ச் மாத நடுப்பகுதியில் நிறைவடைய வேண்டிய யுத்தம் மே மாதம் வரை கொண்டு செல்லப்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அந்தச் சம்பவத்திற்கும், யுத்தம் நீடிக்கப்பட்டு அதற்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வேறொரு நாடாக இருந்தால், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இதேவேளை வெள்ளைக் கொடி விவகாரம் குறித்துத் தான் விரைவில் காணொளி ஒன்றையும் வெளியிடவுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

2009 ஜனவரி 10 ஆம் திகதி கோட்டபாய, சவேந்திர சில்வாவுக்கு அழைப்பினை ஏற்படுத்திப் பேசியிருந்தார். 

அதன் பின்னர் தமக்கு முன்பாக கமராக்கள் இருப்பதனை மறந்த, சவேந்திர சில்வா தனக்கு அருகிலுள்ள உத்தியோகத்தரிடம் வெள்ளைக் கொடி விவகாரம் குறித்துக் கூறினார். 

வெள்ளைக் கொடிகளுடன் மக்கள் வருவதாகவும் எவ்வாறாயினும் அவர்களைக் கொல்லுவோம் என சவேந்திர சில்வா கூறியதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget