Ads (728x90)

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த இலங்கை ஓட்ட வீராங்கனை பாத்திமா சாபியா யாமிக்கிற்கு இன்று தனது சொந்த இடமான கண்டியில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. 

தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 26 வயதான சாபியா யாமிக், பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4x100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் ஆகிய 3 போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றதோடு புதிய போட்டிச் சாதனைகளையும் நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். 

அவர் 100 மீற்றரை 11.53 வினாடிகளிலும், 200 மீற்றரை 23.58 வினாடிகளிலும் கடந்ததுடன், அஞ்சல் ஓட்டத்திலும் இலங்கை 44.70 வினாடிகளில் ஓட்டத்தூரத்தைக் கடக்க பெரும் பங்காற்றினார். 

அத்துடன் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பி.டி. உஷா படைத்த சாதனையை சாபியா யாமிக் முறியடித்துள்ளார். 

கண்டியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய சாபியா யாமிக், அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார். 

“எங்கள் கிராமத்தில் இன வேறுபாடுகள் இல்லை. முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள் என நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் பிறந்த நாள் முதல் அவர்களுடன் வளர்ந்தேன். இதற்கு மாறாக வேறு எதையும் சித்தரிக்கும் இடுகைகளைப் பகிர வேண்டாம். எங்கள் கிராமத்தில் அத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget