இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியா 48 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 6.21 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது.
ப்ரத்திகா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 212 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஸ்ம்ரித்தி மந்தனா 95 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 288 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரத்திகா ராவல் 122 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் 134 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்தார்.
இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர் என்ற இணை சாதனையை லிண்ட்சே ரீலருடன் ப்ரத்திகா ராவல் பகிர்ந்துகொண்டார். இந்த சாதனையை லிண்ட்சே ரீலர் 37 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டி இருந்தார்.
நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் சிறு மழையினால் தாமதித்ததால் அதன் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பையும் இழந்தது.

Post a Comment