நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவைச் அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெதுரு ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய மட்டத்தை நெருங்கியுள்ளது.
தற்போது தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி என்ற வேகத்தில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment