இதன்போது ஜனாதிபதி, "இந்தச் சவாலான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் திறம்படச் செய்வதற்காகத் தேவைப்பட்டால் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர், மேலும் அதற்குத் தமது முழு ஆதரவையும் வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.நிவாரணப் பணிகளுக்கு பணம் ஒரு தடையல்ல என்று இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்கள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களுக்குத் தேவையான நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளதாகவும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு எந்தச் சுற்றறிக்கையும் தடையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு தடை ஏற்படும் சந்தர்ப்பங்கள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணக்கத்துடன் அந்த நிதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நிவாரணக் குழுக்களால் அணுக முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கத் தேவையான ஹெலிகொப்டர்களை அனுப்பி மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மீட்புப் பணிகளுக்குத் தேவைப்பட்டால் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.பாதுகாப்பு முகாம்களுக்கு வந்துள்ள மக்கள், தமது வீடுகளில் தங்கியுள்ள மக்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியே உள்ள மக்களுக்கான சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரணச் சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது மாவட்டங்களில் நிவாரணச் சேவைகள் சென்றடையாத இடங்கள் இருந்தால், அது குறித்த தகவல்களை உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.



Post a Comment