இந்நிலையில் இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா.பிரதீபராஜா, தற்போதைய வானிலைச் சூழல் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
இரு காற்றுச் சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கை ஊடாக நகர்ந்து செல்லும் நிகழ்வானது கடந்த 130 ஆண்டுகளில் இப்போதுதான் நிகழ்கின்றது. இது ஓர் அபூர்வமான மற்றும் ஆபத்தான வானிலை நிகழ்வாகும். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என அவர் எச்சரித்தார்.
மேலும் ஏற்கனவே பெய்த மழையால் மண் ஈரமாகியுள்ளதால், பலத்த காற்று வீசும் போது மரங்கள் வேரோடு சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கடல் நீர்மட்டம் இந்தக் காலப்பகுதியில் உயர்வாக இருக்குமென்பதால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத சூழல் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன. இடர் நிலைமை ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்போது, பரீட்சை நிலையங்கள் இல்லாத பாடசாலைகளையும், பொது மண்டபங்களையும் இடம்பெயரும் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தீவகப் பகுதிகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அவசர மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னதாகவே, உள்ளூராட்சி மன்றங்கள் வாய்க்கால்களைத் துப்புரவு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும். அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களுக்கு ஆளுநர் பணித்தார்.
மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர்.
இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.


Post a Comment