Ads (728x90)

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். 

கனடாவில் உள்ள சில குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் இதற்குப் பதிலளிக்கும்போது தெரிவித்துள்ளார். 

அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாத கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் இலங்கையின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget