நாடாளுமன்ற உறுப்பினர்ககள் தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு வரவுசெலவுத்திட்ட விவாதங்களும், பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.
பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.
சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


Post a Comment