Ads (728x90)

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘தித்வா’எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

அடுத்த சில நாட்களுக்குக் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிட்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய, மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும். 

சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழச்சி பதிவாகும். ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சேதங்களைக் குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

இலங்கையை பாதிக்கும் சீரற்ற வானிலையின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) அறிக்கைகளின்படி, 5,587க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் 56 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த வானிலையால் 37 பேர் உயிரிழந்துள்ளனர், 21  பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget