Ads (728x90)

தித்வா புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, 531 கைத்தொழிலாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அமைச்சின் தரவுத் தொகுப்பின் மூலம் நாடு முழுவதும் சுமார் 10,000 கைத்தொழிலாளர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் பிரதேச செயலக மட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 531 பதிவு செய்யப்பட்ட கைத்தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 106.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை விநியோகிப்பதற்காக கொழும்பு, கம்பஹா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுக்குத் தேவையான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்களை அமைச்சு முன்னெடுத்து வருகிறது. 

எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஒரு வலுவான கைத்தொழில் துறையைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பொறிமுறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget