Ads (728x90)

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானமான சி-17 ரக விமானம் ஒன்று நேற்று பிற்பகல் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இதில் நாட்டின் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான 17 வகையான 25 மெட்ரிக் தொன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பெருமளவிலான உலர் உணவுப் பொருட்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களை விமானத்திலிருந்து இறக்கிய பின்னர், மஹியங்கனை பிரதேசத்தில் கள வைத்தியசாலை ஒன்றை நடத்தி வந்த 85 பேர் கொண்ட மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணத் தொகுதியையும் ஏற்றிக்கொண்டு அவ்விமானம் அங்கிருந்து இந்தியா புறப்பட்டது. 

குறித்த இந்திய மருத்துவக் குழுவினரை வழியனுப்பி வைப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். 

இந்த இந்திய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் உட்பட 7,000 நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க இந்த நன்கொடை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget