இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது.நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து செயல்படுங்கள்.நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான் வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும் என்றார்.





Post a Comment