இதன்படி உடுதும்பர பகுதியில் 308 மில்லிமீற்றர் மழையும், பொப்பிட்டிய 234 மில்லிமீற்றர் மழையும், நுகதென்ன 221 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கைகாவல பகுதியில் 218 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் மற்றும் பல்லேவெல பகுதியில் 178 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக அடுத்த 48 மணிநேரங்களில் மகாவலி கங்கைக் கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
மேலும் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரையை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
பெய்து வரும் மழையினால் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மஹாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரந்தெம்பே நீர்த்தேக்கத்திலிருந்து மினிப்பே அணைக்கட்டு ஊடாக மஹாவலி ஆற்றிற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, பெய்துவரும் மழைவீழ்ச்சியின் அளவிற்கு ஏற்ப அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மகாவலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Post a Comment