Ads (728x90)

டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் நாடளாவிய ரீதியில், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அம்பாறை, திருக்கோவில், காரைதீவு போன்றவற்றில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான பிரதான நினைவு தினம் இன்று காலை காலி, பெரலிய ஆழிப்பேரலை நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்றது. 

இதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை உயிரிழந்தவர்களின் நினைவாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச வாசிகள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. 

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.

இதனால் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன.

சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி 'தேசிய பாதுகாப்பு தினமாக' பெயரிடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான நளின் ஹேவகே, ரத்ன கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி நிஷாந்த சமரவீர, டி.கே. ஜயசுந்தர மற்றும் காலி மாவட்ட செயலாளர், மாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget