Ads (728x90)

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்குள் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்தார். 

பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget