கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று இந்த அச்சுறுத்தல் செய்தி கிடைத்துள்ளது. அதில் செயலக வளாகத்தினுள் 5 குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசேட தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு, இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து செயலக வளாகம் முழுவதும் கூட்டுத் தேடுதல் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது சந்தேகத்திற்குரிய எவ்வித வெடிபொருட்களோ அல்லது உபகரணங்களோ கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலானது பொதுமக்களிடையே வீணான குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கணனி குற்றப்புலனாய்வு பிரிவினரின் உதவி நாடப்பட்டுள்ளதோடு, போலி மின்னஞ்சலை அனுப்பிய நபர்களைக் கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment