எத்தகைய பாரபட்சமும் இன்றி சாட்சிகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை அனுர அரசு மூடிமறைக்கவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில் அவருக்கு இருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் மீளப்பெறப்பட்டது. தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியுமென எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் நாம் எவரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.
எவரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. நாம் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினாலும், சட்டமா அதிபரினாலும் மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் மீளாய்வு செய்து அதற்கமைவாக வழக்குகளை மீள தாக்கல் செய்வதாக எமது” வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை மீளப்பெறப்பட்ட 102 வழக்குகள் மீளாய்வு செய்யப்பப்ட்டு, அவற்றில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
Post a Comment