Ads (728x90)

வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு பாரிய சலுகை அளிக்கும் வகையில் பிரித்தானியாவின் புதிய சீர்திருத்தங்கள் 2026 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இந்த புதிய சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய சந்தையை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ் இலங்கை உற்பத்தியாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்:

உற்பத்தியாளர்கள் தமது ஆடைகளுக்கான மூலப்பொருட்களை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 100% வரை பெற்றுக்கொள்ள முடிவதுடன், பிரித்தானிய சந்தையில் தொடர்ந்தும் பூச்சிய வரிச் சலுகையை (Zero Tariffs) அனுபவிக்க முடியும்.

இரண்டு குறிப்பிட்ட உற்பத்திச் செயல்முறைகள் இலங்கையிலேயே நடைபெற வேண்டும் என்ற முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தற்போது குறைவான செயலாக்கத் தேவைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிய பிராந்தியக் கூட்டமைப்பை உள்ளடக்கிய 18 நாடுகளிலிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முன்னுரிமை வரிச் சலுகைகளைப் பேணுவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கின்றது.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஆடைத்துறை வழங்குகின்றது. அத்துடன் நாடு முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இத்துறை ஆதரவளிக்கின்றது.

பிரித்தானியாவிற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதியின் தற்போதைய மதிப்பு சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இலங்கையின் இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் நிலையில், புதிய சீர்திருத்தங்கள் காரணமாக இந்த ஏற்றுமதி அளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget