Ads (728x90)

சிலர் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் அல்லது மதத் தலங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை” தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தலா 300,000 ரூபாவுக்கான காசோலைகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வழங்கி வைத்தனர்.

வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை  உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget