Ads (728x90)

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

“முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர்.

இதன் ஊடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே இதன் நோக்கமாகும்.

அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் ஆரம்ப நிகழ்வை மாவட்டச் செயலக வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சிறிவர்த்தன, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றி விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை முச்சக்கரவண்டிகளில் ஒட்டினர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget