Ads (728x90)

மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்தை, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சோமாவதியா விஹாரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோமாவதிய - சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரிவடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget