Ads (728x90)

கல்னேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல, அலுபத்த கிராமத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஜனாதிபதி அநுர திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

கல்னேவ, ஹந்துங்கம, அலுபெத்த சந்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக தலா 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, சூறாவளியினால் சுமார் 6,000 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் மக்கள் குடியிருப்பதற்குப் பாதுகாப்பற்றவை என அடையாளப்படுத்தப்பட்ட வீடுகள் என சுமார் 17,000 முதல் 18,000 வரை பதிவாகியுள்ளன.

இதன்படி, சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் சுமார் 20,000 முதல் 25,000 வீடுகளைப் புதிதாக நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

இது தவிர, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்கனவே 31,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புற வறிய மக்களுக்கான 10,000 வீடுகள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்வோருக்கான 2,500 வீடுகள் மற்றும் இந்திய உதவியுடன் மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் என பல திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பழைய வாழ்க்கையை விடவும் தரம்மிக்க ஒரு வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்காக ஒரு வீட்டிற்கு 50 இலட்சம் ரூபா வீதம் வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் 20 இலட்சம் ரூபாயும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தலா 15 இலட்சம் ரூபா வீதம் இரு தவணைகளாக மீதித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget