Ads (728x90)

2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார். 

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்களுக்கு பல அபிவிருத்தி வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சில சந்தர்ப்பங்களில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது 'செலவு செய்யப்படாத நிதி' என்று கணிக்கப்படும் சூழ்நிலை நாட்டில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று எந்தவித தாமதமும் இன்றி தேவையான நிதியை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13% மாத்திரமே செலவிட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். 

அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதன்படி 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, தித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு என்றும், முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget