2024 ஆம் ஆண்டிற்காக நாட்டின் ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்தினால் 437,365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாகாண சபைகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீத அரச நிதியாகும்.
இதன் மூலம் அனைத்து மாகாண சபைகளும் தனது நிர்வாகச் செலவுகளுக்காக திறைசேரியையே முழுமையாகச் சார்ந்துள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் வழங்கும் நிதியைச் செலவிடுவதில் மாகாண சபைகள் கடும் நிதி ஒழுக்கமின்மையைக் கடைப்பிடிப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கச் சுற்றுநிருபங்களை மீறி, மாகாண ஆளுநர்களின் விசேட அனுமதியைப் பெற்று அதிகாரிகள் தமக்கான எரிபொருள் கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொண்டுள்ளனர். விதிமுறைகளுக்குப் புறம்பான பல்வேறு மேலதிக கொடுப்பனவுகளை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
நிறுவனக் கோவையின் விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையான முறையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவுகளையும் அதிகாரிகள் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் நிதியில் இயங்கிக் கொண்டு பொறுப்பற்ற முறையில் இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது மாகாண சபைகளின் நிதி நிர்வாகத்தில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment