பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து மேற்கொண்ட பிரசாரத்தை கைவிட்டு, இப்போது பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதாகவும் அதுவும் இந்த வருடத்திற்குள் புதிய பிரதமர் வருவார் என்றும் கூறி வருகின்றனர். அவர்களது பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவோ அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானதாகவோ கொண்டு வரப்படவில்லை. பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை திருத்தம் செய்வதால் பல்கலைக்கழக கட்டமைப்பு அரசியல் மயமாக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறு அரசியல் மயமாக்கப்படும் என்று அவர்கள் கூறுவதில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கின்றார்கள்.
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் சில விடயங்கள் தற்போதைய நிலையில் பொருத்தமற்றதாகவும், முரண்பட்டதாகவும் காணப்படுகின்றன. அதனை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மாற்றியமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது.
புதிய கல்விக் கொள்கை பற்றி பல விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றார்கள். உத்தேச கல்வி மறுசீரமைப்பின் உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலனை செய்து, அரசியல் நோக்கத்தை விடுத்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்குமாறு எதிர்கட்சியினரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலிக்காமல் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட முடியாது. கல்வி தொடர்பில் சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையான கலந்துரையாடல் அவசியம், அதற்கு முதலில் உள்ளடக்கத்தை முறையாக ஆராய வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பின் இலக்கு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும், இங்கொன்றுமாக பல விடயங்களை பட்டியலிட்டுள்ளார். புதிய மறுசீரமைப்புக்கு அமைவாகவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நடைமுறை உலகுக்கு பொருந்தும் வகையில் தான் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு இளம் தலைமுறையினர் முகங்கொடுக்க வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதை முதலில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 6 ஆம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை மாணவர்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை கற்பிக்க வேண்டும்.
6 தர பாடப்புத்தகத்தில் ஒரு தொகுதியில் தவறு நேர்ந்துள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை திருத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். பொறுப்பில் இருந்து நாங்கள் விலகவில்லை.
அதனை பிடித்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள். எதையாவது வைத்து அரசாங்கத்தை வீழ்த்தலாமா என்றே முயற்சிக்கின்றார்கள்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது கொண்டு வருகின்றீர்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தயாராகவே உள்ளேன். நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வரத்தேவையில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்று நாட்டு மக்கள் தீர்மானித்தால் நான் வீடு செல்ல தயாராகவே உள்ளேன் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment