Ads (728x90)

கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் பாரிய மாற்றத்திற்கான பயணத்தில் நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அவ்வாறு பின்வாங்குவதற்கு நாம் தயாராகவும் இல்லை. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் திட்டமிட்டபடியே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதமரும், கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் வருங்காலக் கல்விச் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக, புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் நேற்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 23,000 ஆசிரியர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வயது எல்லை தொடர்பான சிக்கல்களைத் தீர்த்து, தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தலைமைத்துவப் பண்பு கொண்ட இளைஞர்கள் இத்துறைக்கு வர வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு முதல் இரண்டு மாதங்களுக்குள் டிஜிட்டல் திரைகள் மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு என்பது ஒரு நீண்டகாலச் செயல்பாடு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரு சிறிய குழுவினர் தமது குறுகிய நோக்கங்களுக்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அதிகாரிகள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் செயல்பாடு என்பதால் இதில் சமரசம் கிடையாது என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் பாடசாலைகளின் கட்டடங்களை மட்டும் அபிவிருத்தி செய்யாமல், மாணவர்களின் போக்குவரத்து வசதிகள், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்தும் கவனம் செலுத்துமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget