Ads (728x90)

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரையை பரிசீலித்த பேரவை, இந்தப் பதவிக்கு சமுதிகா ஜயரத்ன பொருத்தமானவர் என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து சுமார் 10 மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.

கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு சபை முன்னர் பல சந்தர்ப்பங்களில் கூடிய போதிலும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாத நிலை நிலவி வந்திருந்தது.

ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட பெயர்களை எதிர்க்கட்சி தரப்பு அங்கீகரிக்காத நிலையில் இழுபறி நிலை நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget