இவ்விரு அணிகளும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் காலியில் நடைபெற்றன.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 316 என்ற இமாலய வெற்றி இலக்கைத் துரத்திய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட இலங்கை அணி இரண்டாவது போட்டியில் 155 ஓட்டங்களுக்கு சிம்பாப்வே அணியைக் கட்டுப்படுத்தி அபார வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணியின் சந்தகான் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மற்றைய வீரரான வனிது அறிமுகப்போட்டியிலேயே ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி கிரிக்கெட் சாதனைப் புத்தகத்தில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலிரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த லஹிரு மதுசங்க மற்றும் அமில அபோன்ஸு ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இந்த இருவரும் விளையாடும் பதினொருவர் கொண்ட அணிக்குள் இடம்பெறுவார்களா என்பது சந்தேகமே. காரணம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த வெற்றி அணியே எதிர்வரும் போட்டிகளில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை மைதானத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
அதேவேளை இந்த மைதானத்தை சுற்றி காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கின்றமையினால் பார்வையாளர்கள் அவதானத்துடன் மைதானத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை யானைகள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை வனஜீ வராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment