அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 2 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் ஒருங்கிணைப்பாளரும் எம்.பியுமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.
அரச சொத்துகளை தனியார் மயப்படுத்தல், சைட்டத்தை தடை செய்யாமை, எட்கா உடன்படிக்கை, காணாமற்போனோர் தொடர்பான சட்ட மூலம் மற்றும் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் செயற்பாடு உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவ ஒன்றியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் பலவும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவுள்ளன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் நகருக்கு நகர் கிராமத்திற்கு கிராமத்திற்கு கிராமம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் பிரதான அரச நிறுவனங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் பிரதான நகரங்களில் எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment