யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் திடீரென ஊருக்குள் புகுந்த யானையின் கோரத் தாக்குதலில் சிக்குண்டு ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த யானைத் தாக்குதலால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பயப் பீதிக்கு உள்ளாகினர். நிம்மதியிழந்த நிலையில் – இரவு முழுவதும் கண்விழித்திருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலர் பிரிவின் உடுத்துறை, ஆழியவளைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானையின் நடமாட்டத்தை மக்கள் அவதானித்துள்ளனர்.
திடீரென அந்தப் பகுதியில் யானை வந்தமையால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். நெருப்பை எரித்து தம்மை தற்காத்துக் கொண்டனர். யானை அங்கிருந்து மருதங்கேணி சந்திப் பகுதியை நோக்கி வந்துள்ளது.
நேற்றுக் காலை மருதங்கேணிச் சந்திப் பகுதியிலிருந்து உடுத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் யானை நடமாடித் திரிந்துள்ளது. அந்தப் பகுதிக்குச் சென்ற ஒருவர் யானையின் தாக்குதலிருந்து சிறிய காயங்களுடன் நூலிழையில் தப்பி வந்துள்ளார்.
இதன் பின்னர் ஊரவர்கள் 4 பேர் அந்தப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். யானை திடீரென வந்ததும் அங்கிருந்து தப்பி ஓட அவர்கள் முயற்சித்துள்ளனர். ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
ஏனையோர் ஓடியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவரைக் காணவில்லை என்று திரும்பிச் சென்றபோது, இருவர் யானையின் தாக்குதலால் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் காலை 10 மணிக்கு நடைபெற்றுள்ளது.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காணாமற்போன நபரது அலைபேசிக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. அலைபேசி ஒலித்த போதும் அவர் பதிலளிக்கவில்லை.
அந்தப் பகுதியில் யானை தொடர்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தமையால் அவரை மீட்கச் செல்ல முடியாமல் உறவினர்கள் திணறினர். மதியம் ஒரு மணியளவிலேயே அந்தப் பகுதிக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
4 பிள்ளைகளின் தந்தையான சிற்றம்பலம் சத்தியசீலன் (வயது-54) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முருகதாஸ் (வயது-32) மற்றும் ஞானகுமார் (வயது-30) இருவருமே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யானையை விரட்டும் முயற்சி நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யானை அந்தப் பகுதியை விட்டு அகலவில்லை. பாதுகாப்புத் தரப்பினரும் இந்த முயற்சியில் களமிறக்கப்பட்டனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் காட்டுப் பகுதியிலிருந்து நீர் நிலைகள் வற்றியுள்ளமையால் கரையோரப் பகுதியூடாக வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு இந்த யானை வந்து சேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment