Ads (728x90)

ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும் போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார்.
ஊழல் அற்ற மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர், நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினையும் சந்தித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் நிலாந்தன் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையில் ஊழல்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்து நெத்தி தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தற்போதைய நிலைமை நல்லாட்சிக்கு முன்னர் இருந்த செயற்பாடுகள் அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் தமது கவனத்திற்கு இதுவரையில் கொண்டுவரப்படவில்லையென தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்களில் தாம் இது தொடர்பில் பூரண கவனம் செலுத்துவதாகவும் இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு நிலவுகின்றது. இது தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இது தொடர்பில் தமது கவனத்திற்கு இதுவரையில் யாம் கொண்டுவரவில்லையெனவும் இது தொடர்பில் தாம் கவனம் செலுத்தி உரிய விசாரணைகள் நடாத்த நடவடிக்கையெடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி உறுதியளித்தார்.
அத்துடன் கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எதனோல் உற்பத்திச்சாலை தொடர்பிலும் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள் அதன் நிலைமை தொடர்பில் கேள்வியெழுப்பினர்.
எனினும் குறித்த எதனோல் உற்பத்தி நிலையம் திறக்கப்படாது என்பதை உறுதியாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget