Ads (728x90)

டில்லி அருகே, பெண்கள் திடீரென மயக்கம் அடைவதும், அவர்களின் தலை முடி துண்டிக்கப்படுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூனியக்காரர்களின் சதித் செயலால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சமீபத்தில், ஹரியானா மாநில கிராமங்களில், பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படும் சம்பவங்கள் நடந்து, பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின், ராஜஸ்தான், உ.பி., மாநிலங்களிலும், பெண்கள் திடீரென மயக்க நிலையை அடைவதும், அவர்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களிலும் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: நான் வழக்கமான பணிகளுக்காக வெளியில் சென்று, மாலை வீடு திரும்பினேன். சிறிது நேரத்தில் எனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து மயக்க நிலையை அடைந்தேன். அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண்விழித்து பார்த்தபோது, என் கூந்தல் வெட்டப்பட்டிருந்தது.

என்னைப் போலவே, இதே கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, மேற்கு வங்கத்தை சேர்ந்த சூனியக்காரர்களின், மாந்திரீக வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பலரும், தங்கள் பெண் குழந்தைகளை, வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல், வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, கங்கன்ஹேரி கிராமத்தில் ஆய்வு செய்த, உளவியல் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறியதாவது: கங்கன்ஹேரியைச் சேர்ந்த பல பெண்கள் ஒரே மாதிரியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை, யாரோ மயக்கமடையச் செய்வதாகவும், அவர்களின் கூந்தல், மர்ம நபரால் வெட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், ஆரம்ப நிலை ஆய்வில், இது குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது.

இது ஒரு மனநோயாகவும் இருக்கலாம். நாட்டின் பல மாநிலங்களிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், பாதிப்புக்குள்ளானவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உடல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் உண்மை வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget