தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். கழன்று சென்றுவிடுமென் பதை அந்தக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை ஈ.பி.ஆர். எல்.எப். விரும்ப வில்லை. எனவே இந்தத் தேர்தலில் தனித்தோ அல்லது ஒத்த தரப்பினருடன் இணைந்தோ பொதுச் சின்னமொன்றில் போட்டியிடவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.
தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட வேண்டிய அவசியம் தமது கட்சிக்கு இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனித்துச் செல்வதன் பின்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் அரசுக் கட்சியுடன் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன இணைந்து அங்கம் வகிக்கின்றன. தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் முன்னாள் போராளிக் குழுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு கட்சிகளும் ஒரேயணியில் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவதால் பெருவெற்றியை ஈட்டிக் கொள்ள முடிகின்றது. ஆனால் காலத்துக்குக் காலம் கூட்டமைப்பினுள் புகைச்சல் ஏற்படவே செய்கின்றது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியைத் தழுவிக் கொண்டார். வெற்றி பெறுவதற்குத் தேவையான விருப்பு வாக்குகள் கிடைக்காமையே அவரது தோல்விக்கான காரணமாகும்.
தேசியப் பட்டியல் மூலமாகவேனும் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமென அவர் நம்பியிருந்தார். இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவருக்கு அழுத்தங்களும் வழங்கப்பட்டன.
ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதில் தமிழ் அரசுக் கட்சியும் தமக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் கருதினார். அன்றிலிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீதும் தமிழ் அரசுக் கட்சியின் மீதும் தீராத பகையுணர்வு அவரிடம் தோன்றிவிட்டது.
காலத்துக்குக் காலம் சம்பந்தனையும் தமிழ் அரசுக் கட்சியையும் சாடிவந்த அவர், தற்போது உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டமைப்பில் விரிசல்கள்
கடந்த காலத்திலும் இடம்பெற்றன
கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பல தடவைகள் அங்கு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனத்தின்போதும் மாகாண அமைச்சர்களை நியமிக்கும் போதும் பெரும் களேபரம் இடம்பெற்றது.
மாகாண சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட தமது சகோதரருக்கு அமைச்சுப் பதவியை வழங்குமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் போர்க்கொடியைத் தூக்கினார். அப்போதே கூட்டமைப் பின் ஐக்கியம் தொடர்பாக மக்களிடம் ஐயம் எழுந்தது.
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் இணைந்து கொண்டன. வடக்கு மாகாண முதலமைச் சர் தாமும் அதில் இணைந்து கொண் டதுடன் இணைத் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
அப்போது கூட்டமைப்புக்கு எதிரானதொரு அமைப்பாகவே தமிழ்மக்கள் பேரவை கருதப்பட்டது. பின்னர் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் கூட்டமைப்பின் மதிப்பைப் பெரிதும் பாதித்துவிட்டது. மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்துபோனது.
கூட்டமைப்பு நீட்சி பெறுவதையே
விரும்புகிறது தமிழ் அரசுக்கட்சி
தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக மதிக்கப்படுகின்ற கூட்டமைப்பினுள் பிளவை ஏற்படுத்துவதற்குச் சிலர் முயற்சிப்பதைத் தமிழ் மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புலிகள் அமைப்பினால் கட்டி வளர்க்கப்பட்ட ஐக்கியம் சிதைந்து போய்விடுவதை எந்த வகையிலும் மக்கள் சகித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
கூட்டமைப்பின் தலைவராகத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் பதவி வகிக்கின்றார். அதேகட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா பொதுச்செயலாளர் பதவியை வகிக்கின்றார். இதன் மூலமாக கூட்டமைப்பி னுள் தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கம் வலுப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களின் பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சி தனித்துச் செயற்படுவதை விரும்பினார்கள். இதனால் அந்தக் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதென்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
ஆனால் தமிழ் அரசுக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் கூட்டமைப்பு தொடர்ச்சியாக செயற்படுவதையே விரும்பு கின்றனர். கூட்டமைப்பு உடைந்துபோனால் தமிழர்களின் ஐக்கியமும் உடைந்து போய்விடுமென்பது இவர்களின் கருத்து.
புரிந்து கொள்ள வேண்டும்
சுரேஷ்பிரேமச்சந்திரன்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணம் இப்போது வந்து விட்டது. அடுத்த ஆண்டு உள்ளூராட்சிச் சபைகள் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதால் தேர்தல் இடம்பெறும் வேளை யில் பிரச்சினைகள் தொடர் பாக விவாதித்துக் கொண்டிருக்க முடியாது.
இதனால் பாதகமான விளைவுகளே ஏற்பட்டுவிடும். சுரேஷ்பிரேமச் சந்திரன் தனிவழி செல்ல விரும்பினால் அதை தடுப்பதால் பயனொன்றுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கூட்டமைப்பு நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணராமல் இருக்கின்றார். தனிவழி சென்று இயங்கும்போதுதான் கூட்டமைப்பின் அருமை அவருக்குத் தெரியவரும். கூட்டமைப்பு பிளவு படுவதைக் காண்பதற்குப் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கூட்டமைப்பு தமது நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசுக் கட்சி பலத்துடன் இருக்கும்வரையில் இவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.
தந்தை செல்வாவின் தியாகத்தால் உருவாக அந்தக் கட்சி எந்தச் சூழ்நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கவே செய்யும். இதைச் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Post a Comment