முத்திரைகள் பல உண்டு. இதில் மிக மிக முக்கியமானது சின் முத்திரை. ஐயப்ப சுவாமி, வலது திருக்கரத்தில் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலோனோர், ஐயப்பன் சின்முத்திரை காட்டிக் கொண்டிருக்கும் திருக்கரத்தை, கால்மூட்டின் மீது வைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. சின் முத்திரையை, தன் மார்புக்கு மிக மிக அருகில் வைத்தபடி திருக்காட்சி தருகிறார்.சின் முத்திரையின் போது, சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நீட்டியபடி இருக்கும். அதாவது, அந்த மூன்று விரல்களும் அகங்காரம், மாயை, கர்மா ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஆள்காட்டி விரலானது, ஆத்மாவைக் குறிக்கிறது. கட்டைவிரல், பரமாத்மாவைக் குறிக்கிறது. சின் முத்திரையில், ஆத்மாவாகிய ஆள்காட்டி விரலும் பரமாத்மாவாகிய கட்டைவிரலும் சேர்ந்திருக்கும். அதாவது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான பந்தத்தைக் குறிக்கின்றன.
அகங்காரம், மாயை, கர்ம வினை ஆகியவற்றை அடக்கி, ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் இணைய வேண்டும். அப்படி இணைவதற்கான ஞானத்தைப் பெற வேண்டும் என்பதே சின்முத்திரை உணர்த்தும் தத்துவம்.
ஜீவாத்மா எனும் சாமி அண்ணா, ஐயப்பன் எனும் பரமாத்மாவுடன் இப்படித்தான் தாயும் சேயுமெனக் கலந்தார். அனவரதமும் ஐயப்பன் திருநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் வாழ்க்கை, அடுத்தகட்டத்துக்குச் சென்றது. அது ஐயப்பனின் பெருங்கருணை!
என் மனதுக்குள் ஒரு குரல்... நடையை அடைக்க என்னை
சம்மதிக்க விடவில்லை. ஒருவேளை ஐயப்பன் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் போல!” என்றார் தந்த்ரி.
வழியில் கார் பழுதாகிவிட, மலைக்கு வருவதில் தாமதமானது சாமி அண்ணாவுக்கு. அவர் வந்த பிறகுதான், பூஜை நடந்தது. ‘ஹரிவராஸனம்’ பாடப்பட்டது.
ஆனால், நடந்தது எதையும் அறியவில்லை சாமி அண்ணா. என்ன நடந்தது என்பதை அவரால் உணரமுடியவில்லை. அருகில் இருந்தவர்கள் விஷயம் சொன்னார்கள். ‘எனக்காகவா... எனக்காகவா...’ என்று கேட்டுக் கொண்டே, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஐயன் ஐயப்பனை நமஸ்கரித்தார். பெருங்குரலெடுத்து அழுதார்.
ஹரிவராஸனம் முடிந்தவுடன், அங்கிருந்த பக்தர்கள் எல்லோரும் பகவானே காத்திருந்த பக்தன் என்று சொல்லிப் பூரித்துப் போனார்கள். கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவை பதினெட்டாம் படிக்கு முன்னே நிற்க வைத்தார்கள். ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று எல்லோரும் கோஷம் எழுப்பினார்கள். சாமி அண்ணாவை நமஸ்கரித்து வணங்கினார்கள்.

ஐயப்ப சுவாமி, தன்னை உலகுக்குச் சொல்ல, ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரேனும் ஒருவரை அடையாளம் காட்டுவார். கடவுளின் அருங்குணமே அதுதான். இப்போது சாமி அண்ணாவை அவர் உலகுக்குக் காட்டியிருக்கிறார். இனி, சாமி அண்ணாவால், ஐயப்பனின் பேரருளும் சாந்நித்தியமும் உலகுக்குச் சுட்டிக் காட்டப்படும் என்பதாக, தந்த்ரியும் மேல்சாந்திகளும் உணர்ந்து ஆனந்தித்தார்கள்.
சம்ப்ரதாயங்களிலும் சாஸ்திரங்களிலும், சபரிமலை சடங்குகளிலும் சாமி அண்ணாவின் அறிவு அபாரமானது. எதையுமே சுற்றி வளைக்காமல், முகத்தை நோக்கி நேரடியாகப் பேசும் குணம் கொண்டவர் அவர். எனவே முறையாக அனுஷ்டானங்களை விரும்பியவர்களும், சரியான யாத்திரை முறைகளை கடைபிடிக்க ஆசைப்பட்டவர்களும் இவரின் உதவியை நாடினார்கள். என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். வழிகாட்டியாக, குருவாக சாமி அண்ணாவை பக்தர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள்.
நேர்மை எங்கே இருக்கிறதோ அங்கே கண்டிப்பு இருக்கும். கண்டிப்பு இருக்கும் இடத்தில், ஒழுக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஒழுக்கத்துடன் இருப்பவரை, முகமே காட்டிக் கொடுத்துவிடும். முகத்தில் ஒளிரும் தேஜஸ் எல்லோருக்கும் உணர்த்திவிடும். இவற்றால், சாமி அண்ணாவுக்கு இன்னும் இன்னுமாக மரியாதை கூடியது. மதிப்பை தேடித்தந்தது.
சபரிமலையின் பூஜகர்களும், குரு ஸ்வாமிகளும், தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும் சாமி அண்ணாவிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார்கள்.
ஜாதி மத வித்தியாசமின்றி பலரையும் சபரிமலைக்கு அழைத்துச் சென்று ஐயனின் அருளானது, அனைவருக்கும் கிடைக்க வழிவகுத்தார் சாமி அண்ணா. இரவென்றும் பகலென்றும் பார்க்காமல், அன்னதானத்தை நடத்திக் கொண்டே இருந்தார்.
இங்கே ஒரு விஷயம்... சபரிமலைக்கு வருடம் தவறாமல் மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். வருடந்தோறும் சபரிமலைக்குச் சென்று வருகிறார்கள். எனக்குத் தெரிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு, முடியாதோருக்கு மாலையும் வேஷ்டியும் வாங்கித் தருகிறார்கள். ஜோல்னாப்பையும் இருமுடிப்பையும் வழங்கி உதவுகிறார்கள். சபரிமலை யாத்திரைக்கு தங்கள் செலவில், இரண்டு பேரையோ மூன்று பேரையோ அழைத்துச் செல்கிறார்கள்.
அதுமட்டுமா. அன்னதானத்துக்கு பொருளுதவி செய்வதையும் உதவிகள் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இனிய ஐயப்ப பக்தர்களே! அன்றாட வாழ்வில் எவ்வளவோ செலவு செய்கிறோம். தினமும் ஒரெயொரு விஷயத்தைச் செய்யமுடியுமா என்று பாருங்கள். நிச்சயம் செய்யமுடியும். தினமும் ஐந்து ரூபாயை, ‘இந்தக் காசு என்னுதில்லை’என்று எடுத்து வையுங்கள். ஒரு உண்டியலில், தினமும் ஐந்தைந்து ரூபாயாகப் போட்டு வாருங்கள்.
உதாரணத்துக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து தினமும் ஐந்து ரூபாயை உண்டியலில் சேமிக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஜனவரி, பிப்ரவரி என்று மாதந்தோறும் சேமிக்கிற காசு, நவம்பர், டிசம்பரில் மொத்தப் பணமாக வளர்ந்திருக்கும்.
அந்தப் பணத்தை, கஷ்டத்தில் இருக்கிற, குறைந்த சம்பளத்தில் இருக்கிற ஆனால் ஐயப்பனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, மலைக்குச் செல்ல விரும்புகிற எவருக்கேனும் அந்தத் தொகையை வழங்கி உதவுங்கள்.
இதனால், நம்மைப் போல் இருக்கிற அந்த சாமிமார்கள் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ... ஐயன் ஐயப்ப சுவாமி மகிழ்ந்து போவான். குளிர்ந்து விடுவான். நெகிழ்ந்து உருகுவான். நம்மையும் நம் சந்ததியையும் சிறப்பாக்குவான். செம்மையாக்குவான். செழிப்பாக்குவான் என்பது சத்தியம்!
சாமி அண்ணாவால், சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் எண்ணிக்கையாய் வளர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான சாமிமார்களுக்கு இவர் வழங்கிய அன்னதானம், அவரின் சந்ததியை, நல் வித்துக்களாக வளர்த்து, வார்த்தெடுத்திருக்கிறது.
ஐயப்ப சுவாமி அப்படித்தான். எந்தத் தருணத்திலும் நம்மை கைவிடமாட்டான்!
சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்.....
Post a Comment