இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இ.ஆர்னோல்ட் களமிறங்குவதை எதிர்த்து, பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆர்னோல்ட்டின் நியமனம் ஒரு பகுதி மக்கள் மத்தியிலும் சமூக வலைத் தளங்களில் இயங்குவோரில் ஒரு பகுதியினர் மத்தியிலும் கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இதனைத் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி ஆர்னோல்ட்டைத் தோற்கடிப்பதே இந்தப் பொது அணியினரின் திட்டம்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையிலான அணியில் இந்தப் பொது வேட்பாளரை நிறுத்தி ஆர்னோல்ட்டை எதிர்ப்பதே திட்டம். இது தொடர்பாக நேற்றும் சில கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியத்துக்கு மாறானவரும் கொழும்பு அரசுடன் சேர்ந்து நெருக்கமாக இயங்கி அவர்களின் நலனைப் பாதுகாப்பவரும் என்று எதிர்த்தரப்பால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் நம்பிக்கைக்குரிய நபராக விளங்குபவர் ஆர்னோல்ட் என்பதால் அவரும் தமிழர்களுக்கு எதிரான போக்கில் செயற்படுவார் அவருக்கு எதிர்ப்பு அலை பலமாக இருப்பதற்கான காரணம்.
ஆர்னோல்ட் வெற்றிபெறுவது கூட்டமைப்புக்குள் சுமந்திரனைப் பலப்படுத்தும் என்பதுடன் ஆர்னோல்ட்டின் அண்மைய சில தமிழ்த் தேசிய விரோதப் போக்குகளும் அவருக்கு எதிராக வாக்குகளைத் திருப்பப்கூடிய பலம் என்று மற்றைய தரப்புகள் நினைக்கின்றன.
இதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அவரது குழுவினருக்கு எதிரான பரப்புரையைத் தீவிரப்படுத்தி யாழ். மாநகர சபையில் ஆர்னோல்ட்டைத் தோற்கடிக்க முடியும் என்று அந்தத் தரப்புகள் கருதுவதால் எதிர்த் தரப்புகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முற்சிகள் நடந்து வருகின்றன.
Post a Comment