ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொது எதிரணியும் இணைந்தே உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இப்போது தனித்து செயற்பட்டாலும் மஹிந்த தரப்பும் நாங்களும் ஒரு அணியென்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துகொண்ட விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பலம் மிகவும் உயரிய மட்டத்தில் உள்ளது. எமது வேட்பாளர்களை சரியாக தெரிவு செய்து களத்தில் இறக்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் இணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது வெற்றியினை பெற்றுக்கொள்ளும் வகையில் நடத்தும் மாநாடு நாளை( இன்று) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது. அத்துடன் நாளை மறுதினம்( நாளை) கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை ஒன்றிணைத்த மாநாடும் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடுகள் இடம்பெறும்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஒரு தரப்பினர் தனித்து களமிறங்குகின்றனர். அனைவரையும் ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக களமிறங்க வேண்டும் என்றே நாம் விரும்பினோம். அதற்காகவே பொது அணியுடன் நாம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். எனினும் அவை வெற்றியளிக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் இறுதியில் அவர்கள் மீண்டும் எமது கட்சிக்கு வந்தாக வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கடந்தகால வரலாறுகள் என்னவென்பது இன்றைய சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என நம்புகின்றேன். தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் தோல்வியின் பின்னர் நாற்காலி சின்னத்தில் களமிறங்கி உள்ளூராட்சி சபைகளையும், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நாம் வெற்றிகொண்டோம். மஹிந்த ராஜபக் ஷவே இன்றும் நாற்காலி சின்னத்தின் தலைவர். முன்னாள் பிரதமர் டி.எம். ஜெயரத்னவே கட்சியின் பொதுச்செயலாளர். இதன் அடிப்படையிலேயே நாம் இம்முறையும் இணைந்து செயற்பட விரும்பினோம். எனினும் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை.
எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றிபெறும். அதேபோல் நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்படும் பொது எதிரணியுடன் இணைந்தே ஆட்சிமைப்போம். அவர்கள் பிரிந்து செயற்பட்ட போதிலும் அவர்கள் எமது உறுப்பினர்களேயாவர். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை அவசியம் இல்லை. அவர்களுடன் நாம் உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து அமைக்க வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிந்துடன் முடிவுகளை பாருங்கள். எமக்கே வெற்றி கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
Post a Comment