இலங்கை மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளின் மீதான விவாதத்தை பெப்ரவரி மாதம் 20,21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பக்கம் குறைவடைந்தமை தொடர்பாக ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி தலைவர்களை பிரத்தியேகமாக சந்தித்து அறிவுறுத்துவார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சி தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களின் ஊழல் மோசடி தொடர்பாக நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழுவின் அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த இரு அறிக்கைகள் மீதான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் சிக்கல் நிலை காணப்பட்டது. இந்நிலையில் குறித்த இரு அறிக்கைகளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் நேற்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி இந்த அறிக்கைகள் மீதான விவாதத்தை பெப்ரவரி மாதம் 20 ,21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி இரு தினங்களிலும் பிற்பகல் 1 மணி தொடக்கம் 6 மணி வரை விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பூரண அறிக்கை சமர்ப்பிக்காமை தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்தும் 6000 பக்கங்களுக்கு மேல் பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இருப்பதாக பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பிலும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து கட்சி தலைவர்கள் முன் விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நேற்று (இன்று)கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் கட்சி தலைவர் கூட்டத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமூகமளிக்கவில்லை.
எனினும் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழுவின் அறிக்கையின் பக்கங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி தலைவர்களை பிரத்தியேகமாக சந்தித்து தெளிவுப்படுத்துவதாக ஜனாதிபதியின் செயலாளர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதியின் செயலாளரின் தகவலை சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தின் புதிய ஒழுக்கங்கள் மற்றும் நிலையியற் கட்டளை மறுசீரமைப்பு தொடர்பில் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டது
Post a Comment