வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டில் அறிவித்தார்.இதையடுத்து இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கூடி பேசினர். அப்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா ஒப்புக்கொண்டது. எனினும், தொடக்கவிழா பேரணியில் பங்கேற்க வேண்டும் என்ற தென்கொரியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக வடகொரியா கூறியிருந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் லாசனே நகரில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் (ஐஓசி) தலைமையகத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இதில் இரு நாடுகளின் விளையாட்டுத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக இரு நாடுகளும் இணைந்து தொடக்க விழா பேரணியில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ஐஓசி தலைவர் தாமஸ் பாச் கூறும்போது, “ஒலிம்பிக் விளையாட்டுகள் குறித்து கொரிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். விளையாட்டு என்பது இரு நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கும் தளமாக விளங்குகிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது” என்றார்.
Post a Comment