வருகிற மார்ச் மாதம் 1ந் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மாநில திரையுலகமும் இணைந்து தென்னிந்திய திரைப்பட ஸ்டிரைக் நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.ஜிஎஸ்டி வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டண உயர்வு, திருட்டு விசிடி மற்றும் இணைய தள பதிவேற்றங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்சினைகளை சினிமா சந்தித்து வருகிறது.
கடந்த வாரம் கூடிய தெலுங்கு திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு இதுகுறித்து ஆலோசித்து, இந்த பிரச்சினைகளை அரசு சரி செய்து தரும்வரை புதிய படங்களை தயாரிப்பதில்லை, வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது. வருகிற மார்ச் 1ந் தேதி முதல் இதனை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக மற்ற மாநில திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஸ்டி வரி, கியூப் கட்டணம் இவற்றோடு தியேட்டர் பார்க்கிங் கட்டணம், மினிமம் கியாரண்டி ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதேபோல கேரளா, மற்றும் கர்நாடக மாநில திரைப்பட சங்கங்களும் கூடி விவாதித்துள்ளன. அவைகள் தெலுங்கு திரையுலகம் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதென முடிவு செய்திருக்கின்றன. இதனால் வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து தென்னிந்திய திரையுலக ஸ்டிரைக் நடக்க இருப்பதாக தெரிகிறது.
Post a Comment