மாலத்தீவில் அவசர நிலையை (எமர்ஜென்சி) 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட அரசியல் தலைவர்கள் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்தி மீண்டும் அதிபராக யாமீன் திட்டமிட்டார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பி.க் கள் 12 பேர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கைதிகள் 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன், 12 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையும் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த அதிபர் யாமீன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் உட்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், நாட்டில் கடந்த 5-ம் தேதி அவசர நிலையை 15 நாட்களுக்கு பிரகடனப்படுத்தினார்.
இதையடுத்து, 9 அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில், அவசர நிலை பிரகடனத்தை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பரபரப்பான சூழ்நிலையில், முந்தைய உத்தரவை வாபஸ் பெற்று 12 எம்.பி.க்கள் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டது.
இதன்மூலம் நாடாளுமன்றத்தில் 12 எம்.பி.க்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து நாடாளுமன்றத்துக்கு வெளியில் எதிர்க்கட்சியினரும் பெரும் போராட்டம் நடத்தினர். எனினும், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 85 பேரில் 39 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பின்னர் அவசர நிலையை 30 நாட்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
Post a Comment