இலங்கை அரசியலில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைக்கு இவ்வாரத்தில் தீர்க்கமான முடிவு கிட்டுமென நம்பப்படுகிறது. தேசிய அரசாங்கத்தின் 2வருட கால ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து அதன் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக ஆட்சி அமைப்பதற்கான பனிப்போரை ஆரம்பித்தன.இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சூழ்நிலைகள் காணப்பட்டன. இதன் பின்னணியில் நாட்டின் அரசியல் ஸ்திரநிலை சீர்குலைந்ததுடன் இலங்கையின் அரசியலின் அடுத்தகட்டம் என்ன? என்பது குறித்து
கேள்விக்குறியான நிலைமையே உருவாகியுள்ளது.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறுவது குறித்தும் ஆராயப்பட்டது. மேலும் அரசாங்கத்தின் தற்போது எழுந்துள்ள சிக்கலான நிலைமை குறித்து பல்வேறு கருத்துகளை சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்து ஆட்சியமைப்பதற்கான பனிப்போரில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதையே காணமுடிகிறது. எவ்வாறெனினும் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு இவ்வாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் உறுப்பினர்களுடன் நேற்றுக் காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளை புரிந்துகொண்டு செயற்படுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுசில் பிரேம ஜயந்த உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சிக்கு செல்வதாகவும் எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யப்படவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த இளம் உறுப்பினர்களை சமாதானப்படுத்திய பிரதமர் அமைதி நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமகால நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒத்துழைப்பை வழங்குமாறு சில வெளிநாட்டு தூதரங்கள் தொடர்ந்து ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment