யாழ்- மாநகர சபைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராவதில் எந்த முட்டுக்கட்டையுமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் மாநகர சபையின் ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டி இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேயராக ஆர்னோல்ட்டை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராவதால், மேயர் பதவியைப் பெற்றுக் கொள்ள அந்தக் கட்சியும் முயற்சிகள் மேற்கொள்ளும். இதனால் ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டி மிகக் தீவிரமடையும் என்று கூறப்படுகின்றது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் மேயர் வேட்பாளராக மணிவண்ணன் நிறுத்தப்பட்டிருந்தார். வட்டாரப் பட்டியலிலேயே அவர் உள்ளடக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 9 வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன், 4 விகிதாசார ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.
சபைகளில் 25 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் கட்டாயம் என்பதன் அடிப்படையில், கூட்டமைப்பு சார்பில் 4 பெண்களும், காங்கிரஸ் சார்பில் 4 பெண்களும், ஈ.பி.டி.பி. சார்பில் 3 பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதால், அந்தக் கட்சிக்கு கிடைத்த விகிதாசார ஆசனங்களில் நான்கையும் பெண்களுக்கே வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த சட்டஏற்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நிலமை காணப்பட்டது. சிங்கள மொழியிலான சட்டத்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமுரண்பாடுகள் ஏற்படின் இறுதியில் சிங்களமே மேலோங்கும் என்ற அடிப்படையில், சிங்கள மொழியில் எழுதப்பட்ட சட்டத்துக்கு அமைவாக ஒவ்வொரு கட்சியும் நியமிக்க வேண்டிய பெண்களின் ஆசன எண்ணிக்கை மீளக் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 பெண்களையும், காங்கிரஸ் கட்சி மூன்று பெண்களையும், ஈ.பி.டி.பி. மூன்று பெண்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பெண் உறுப்பினரையும் நியமிக்க வேண்டும்.
Post a Comment