அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில் உள்ள கடற்படை அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தை பிரித்தவுடன் 11 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணை தொடங்கியுள்ளது.விர்ஜீனியா மாநிலத்தின் ஆர்லிங்டன் கவுன்ட்டி, மையர்-ஹெண்டர்சன் ஹால் கட்டிடத்தில் அமெரிக்க ராணுவ மற்றும் கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தபாலில் கடித உறை ஒன்று வந்தது. இந்த உறையை கடற்படை வீரர் ஒருவர் பிரித்தவுடன் அவருக்கும் அருகில் இருந்த 10 பேருக்கும் கைகள் மற்றும் முகத்தில் அரிப்பு ஏற்பட்டது. மேலும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தக் கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அந்தக் கடித உறை ஆய்வு செய்யப்பட்டதில் அதில் கேடு விளைவிக்கும் பொருள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. என்றாலும் உயர் ஆய்வுக்காக குவான்டிகோவில் உள்ள பகுப்பாய்வகத்துக்கு அந்த உறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த உறையில் இருந்த கடிதத்தில் தரம் தாழ்ந்த வசவு சொற்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.
மர்ம கடிதம் தொடர்பாக கடற்படை குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் எப்பிஐ இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளன.
Post a Comment